தமிழ்நாடு

சென்னை வந்த அமித் ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

Published On 2022-11-12 09:31 GMT   |   Update On 2022-11-12 12:10 GMT
  • எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். சமாதானமாக போகவேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது.
  • தனிப்பட்ட முறையில் ஓ.பி.எஸ்.- அமித் ஷா சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்த்த நிலையில் அது நடைபெறவில்லை.

சென்னை:

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியயோருக்கிடையே உள்ள மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டவட்டமாக கூறி வருகிறது. கட்சியின் நலன் கருதி இரு தலைவர்களும் சமாதானமாக போகவேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது. எனவே, பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் ஆகியோர் இந்த விஷயத்தில் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிக்கலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.

நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சந்தித்தனர். அப்போது அரசியல் குறித்து எதுவும் பேசப்படவில்லை.

இந்நிலையில், தனியார் நிகழ்ச்சிக்காக இன்று சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். தனிப்பட்ட முறையில் சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடைபெறவில்லை. நிகழ்ச்சியில் மரியாதை நிமித்தமாக வெறுமனே இருவரும் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். அதிமுக குறித்து எதுவும் பேசவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தபின்னர் அமித் ஷா, பாஜக அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்தது சந்தித்தது மகிழ்ச்சிகரமாகவும், திருப்திகரமாகவும் இருந்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

Tags:    

Similar News