தமிழ்நாடு செய்திகள்

தக்காளி-வெங்காயத்தை தொடர்ந்து ஊட்டி மலை பூண்டின் விலையும் உயர்வு

Published On 2023-07-21 09:38 IST   |   Update On 2023-07-21 09:38:00 IST
  • ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த வாரம் பெய்த தொடர்மழை காரணமாக பூண்டு விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டது.
  • தக்காளி, சின்ன வெங்காயம் விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

ஊட்டி:

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைத்தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பூண்டு, பீன்ஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இதைபோல கோத்தகிரி, மஞ்சூர், ஆடாசோலை, தேனோடு, கம்பை, அணிக்கொரை உள்பட பல்வேறு இடங்களில் மலைப் பூண்டு பயிரிடப்பட்டு உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு சந்தைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ பூண்டு ரூ.170 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த வாரம் பெய்த தொடர்மழை காரணமாக பூண்டு விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டது.

இதனால், தற்போது ஊட்டி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் ஊட்டி மலைப்பூண்டு கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் பூண்டு ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்கனவே தக்காளி, சின்ன வெங்காயம் விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்தநிலையில் மலைப்பூண்டின் விலையும் உயர்ந்துள்ளதால் பெண்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். வடமாநிலங்களில் பெய்த மழையால் அங்குள்ள வியாபாரிகள் மேட்டுப்பாளையம் மொத்த விற்பனை மண்டிக்கு வந்து மலைப்பூண்டை மொத்தமாக வாங்கிச் சென்று விடுகிறார்கள். மேலும் மருத்துவ குணம் நிரம்பி உள்ளதால் மலைப்பூண்டுக்கு ஏற்கனவே வரவேற்பு அதிகம். இந்த இரண்டும் சேர்ந்து கொள்ள மலைப்பூண்டின் விலையும் உயர்ந்து வருகிறது.

Tags:    

Similar News