ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முதுமலையில் அதிகாரிகள் ஆய்வு- முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
- வருகிற 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகிறார்.
- ஜனாதிபதி கர்நாடக மாநில மைசூரில் இருந்து ஹெலிகாப்டரில் மசினக்குடி வந்து, வாகனத்தில் தெப்பக்காடு செல்கிறார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.
இந்த யானைகள் முகாமில் ரகு, பொம்மி குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இதனை பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளி ஆகியோர் தங்கள் மகனாக நினைத்து வளர்த்து வந்தனர்.
இந்த நிகழ்வினை மையமாக வைத்து மும்பையை சேர்ந்த கார்த்தகி கன்சவால்ஸ் என்பவர் தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம் பெற்று பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்த நிலையில், சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினையும் தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் பெற்றது.
ஆஸ்கர் விருது பெற்ற சில நிமிடங்களிலேயே இந்த படத்தில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்றனர்.
இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி பிரதமர் மோடி முதுமலைக்கு வந்து பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
மேலும் பிரதமர் அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடி விட்டு, அங்கு வளர்க்கப்பட்டு வரும் மற்ற யானைகளையும் பார்த்து அவற்றிற்கு உணவும் வழங்கினார்.
இந்த நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.
அப்போது பாகன் தம்பதியினர் முதுமலைக்கு வரும்படி ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தனர். அதற்கு அவரும் வருவதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் வருகிற 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகிறார். அன்றைய தினம் காலை 11 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு 2.45 மணிக்கு வருகிறார்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு 3.45 மணிக்கு வருகிறார். தொடர்ந்து முதுமலையில் உள்ள பாகன்கள், ஆதிவாசி மக்களை சந்திக்கிறார். மேலும் வளர்ப்பு யானைகளையும் பார்வையிட உள்ளார்.
பின்னர் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு, மசினகுடிக்கு சென்று ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மைசூருக்கு செல்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் மற்றும் ஜனாதிபதி வரக்கூடிய பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மசினகுடியில் உள்ள ஹெலிபேட் தளம், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் அம்ரித், முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், முதுமலை துணை இயக்குனர்கள் வித்யா, அருண்குமார் உள்பட பிற துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் ஜனாதிபதி வருகையையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனையும் மேற்கொண்டனர். மசினகுடி ஊராட்சியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம், ஹெலிபெட் தளம் உள்ளிட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஜனாதிபதி கர்நாடக மாநில மைசூரில் இருந்து ஹெலிகாப்டரில் மசினக்குடி வந்து, வாகனத்தில் தெப்பக்காடு செல்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நடந்து வருகிறது என்றார்.