மாணவி ராஜேஸ்வரிக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கிய கோட்டாட்சியர்
இடைநின்ற மாணவியை சாதிக்க வைத்த அதிகாரி- தேர்வில் வெற்றி பெற்றதால் அரசு காரில் அழைத்துச்சென்று கவுரவம்
- சப்-கலெக்டர் பிரியங்கா தலைமையிலான அதிகாரிகள் சென்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து பள்ளிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
- பளியர் இனத்தை சேர்ந்த 17 குடும்பங்களில் முதன்முறையாக ராஜேஸ்வரி மட்டும்தான் 10-ம் வகுப்பு தேர்வை எழுதி சாதித்தவர்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் உள்ள குகைகளில் பளியர் இன மலைவாழ் மக்கள் அதிகளவு வசித்து வந்தனர். இவர்களை வனத்துறையினர் பழனி அருகே உள்ள குட்டிக்கரடு, மண்திட்டு, பொந்துபுளி, குதிரையாறு மற்றும் சண்முகம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்தனர்.
இவர்களுக்கு ரேசன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவையும் பெற்று தந்தனர். இருந்தபோதும் இவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து பின்னர் இடையில் நின்றுவிட்டனர். பளியர் இனத்தை சேர்ந்த 17 குடும்பங்கள் சண்முகம் பாறையில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் குடிசை வீட்டில் மின்விளக்கு வசதி இல்லாத மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்தனர். இதுவும் இவர்களது குழந்தைகள் கல்வியை தொடர முடியாத நிலைக்கு காரணமாக அமைந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் கல்வித்துறை அதிகாரிகள் முயன்றனர். அப்போது தன்னாசி மகள் ராஜேஸ்வரி(16) என்பவர் 10-ம் வகுப்பை பாதியில் நிறுத்தியது தெரியவந்தது.
அவருக்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமையிலான அதிகாரிகள் சென்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து பள்ளிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்பிறகு பள்ளியில் சேர்ந்த ராஜேஸ்வரி அரையாண்டு தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் மீண்டும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இந்த தகவல் அறிந்ததும் மாணவியை உதவி கலெக்டர் பிரியங்கா நேரில் சந்தித்து தோல்வியை பற்றி கவலைப்படாமல் அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகுமாறு கூறினார். அதன்பின் மீண்டும் பள்ளிக்கு சென்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார். தேர்வு முடிவு வெளியான நிலையில் அவர் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோட்டாட்சியர் சிவக்குமார் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டினார். மேலும் 11-ம் வகுப்பில் சேர்வதற்கான கல்வி உபகரணங்களை வழங்கி படிப்பை தொடருமாறு கூறினார்.
மேலும் தனது காரில் முன்புற சீட்டில் மாணவியை அமர வைத்து ஊரை வலம் வந்தார். நீயும் நல்ல முறையில் கல்வி கற்றால் அரசுப்பணியில் சேர்ந்து இதுபோல சைரன் வைத்த காரில் வலம் வரலாம். மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று தன்னம்பிக்கை ஏற்படுத்தி பேசினார். இது மாணவியின் குடும்பத்தினர் மட்டுமின்றி அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பளியர் இனத்தை சேர்ந்த 17 குடும்பங்களில் முதன்முறையாக ராஜேஸ்வரி மட்டும்தான் 10-ம் வகுப்பு தேர்வை எழுதி சாதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.