தமிழ்நாடு

நாமக்கல் போலீஸ் நிலையம் முன்பு குப்பைகள் கொட்டப்பட்டுள்ள காட்சி.

ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு ரூ.1000 அபராதம்- போலீஸ் நிலையம் முன்பு குப்பையை கொட்டிய நகராட்சி ஊழியர்

Published On 2022-11-29 08:03 GMT   |   Update On 2022-11-29 08:03 GMT
  • நாமக்கல், திருச்சி ரோட்டில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
  • நகராட்சி ஆணையாளர் சுதா துப்புரவு பணியாளர்களை அனுப்பி வைத்து காவல் நிலையம் முன்பு கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்தார்.

நாமக்கல்:

தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாதவர்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டுவோர் உள்பட போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கும் காவல் துறை சார்பில் கூடுதலாக அபராத கட்டணம் விதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாமக்கல், திருச்சி ரோட்டில் நேற்று போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிளில் வந்த நாமக்கல் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் கந்தசாமிக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்தனர் .

இதனால் கந்தசாமி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நகராட்சி பணியாளரான என்மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என கூறினார். ஆனால் போலீசார் இதனை கண்டு கொள்ளவில்லை. அரசு விதிப்படி அபராதம் கட்டியே ஆக வேண்டும் என்று போலீசார் கூறிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு பணி மேற்பார்வையாளர் கந்தசாமி நாமக்கல் போலீஸ் நிலையம் முன்பு நகராட்சி பேட்டரி வாகனத்தில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விட்டு சென்றார் .

இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவம் குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே நகராட்சி ஆணையாளர் சுதா துப்புரவு பணியாளர்களை அனுப்பி வைத்து காவல் நிலையம் முன்பு கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்தார்.

இதுகுறித்து நாமக்கல் நகராட்சி ஆணையாளர் விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளார். அவரை அழைத்து விளக்கம் கேட்டதுடன் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையர் சுதா தெரிவித்தார்.

Tags:    

Similar News