மர்ம காய்ச்சலால் உயிரிழந்த குழந்தை சிவதர்ஷினி.
பரமத்திவேலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 3½ வயது சிறுமி பலி
- கடந்த சில நாட்களாக குழந்தை சிவதர்ஷினி மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
- மர்ம காய்ச்சலால் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 37), இவரது மனைவி ஜெயஸ்ரீ (32). இந்த தம்பதிக்கு தர்ஷன் (9) என்ற மகனும், சிவதர்ஷினி என்ற (3½) மகளும் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக குழந்தை சிவதர்ஷினி மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து சிவதர்ஷினியை அவரது பெற்றோர், பரமத்திவேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
குழந்தைக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து வந்ததால் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குழந்தை சிவதர்ஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மர்ம காய்ச்சலால் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சிறுமி டெங்கு காய்ச்சலால் இறந்திருக்கலாம் என்ற அச்சத்தால், அப்பகுதியில் காய்ச்சல் பரவாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சுகாதாரத்துறையினர் முகாம் நடத்தி, அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்து காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.