தமிழ்நாடு செய்திகள்

சேதப்படுத்தப்பட்ட விநாயகர் சிலையை விழா குழுவினர் மீட்ட காட்சி

நள்ளிரவில் விநாயகர் சிலையை உடைத்த மர்ம நபர்கள்: போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-09-19 11:48 IST   |   Update On 2023-09-19 11:48:00 IST
  • சிலை பாதுகாப்பு பணியில் இருந்த விழாக்குழு இளைஞர்கள் உணவு சாப்பிடுவதற்காக சென்றிருந்த வேளையில் மர்மநபர்கள் சிலையை தூக்கிச் சென்றனர்.
  • வாழப்பாடியில் நள்ளிரவில் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சடையப்பர் தெருவில் பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் குணா என்கிற குணசேகரன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை விநாயகர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் சிலை பாதுகாப்பு பணியில் இருந்த விழாக்குழு இளைஞர்கள் உணவு சாப்பிடுவதற்காக சென்றிருந்த வேளையில் அப்பகுதிக்கு வந்த மர்மநபர்கள் சிலர் விநாயகர் சிலையை தூக்கிச் சென்றனர். பின்னர் அதனை சாலையில் போட்டு உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் பரவியதால் அப்பகுதியில் பா.ஜ.க. தொண்டர்களும் விழாக் குழுவினரும் குவிந்தனர். வாழப்பாடி போலீசாரும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். இன்ஸ்பெக்டர் உமா சங்கர் தலைமையிலான போலீசார் விநாயகர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

வாழப்பாடியில் நள்ளிரவில் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News