தமிழ்நாடு செய்திகள்

கருணாநிதி பெயரில் விருது வழங்கவேண்டும்- முத்தமிழ் பேரவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Published On 2023-07-22 19:30 IST   |   Update On 2023-07-22 19:30:00 IST
  • இயல் செல்வம் விருது பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவுக்கும், இசை செல்வம் விருது எஸ்.மகதிக்கும் வழங்கப்பட்டது.
  • கருணாநிதியால் வளர்க்கப்பட்ட அமிர்தம் முத்தமிழ் பேரவையை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

சென்னை:

சென்னை ஆர்.ஏ.புரத்தில் முத்தமிழ் பேரவை 42ஆம் ஆண்டு இசை விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்கினார்.

இயல் செல்வம் விருது பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவுக்கும், இசை செல்வம் விருது எஸ்.மகதிக்கும் வழங்கப்பட்டது. ராஜ ரத்னா விருது கணேசனுக்கும், நாட்டிய செல்வம் விருது எஸ்.பழனியப்பனுக்கும், வீணை செல்வம் விருது ராஜேஷ் வைத்யாவுக்கும், தவில் செல்வம் விருது கண்ணனுக்கும் வழங்கப்பட்டது.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

முத்தமிழ் பேரவையின் 42ம் ஆண்டு இசை விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதியால் வளர்க்கப்பட்ட அமிர்தம் பன்முகத்தன்மை கொண்டவர். முத்தமிழ் பேரவையை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் அமிர்தம். கலைஞர் பெயரால் முத்தமிழ் பேரவை விருது வழங்க வேண்டும். சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவர் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா. இசை உலகில் இளம் புயலாக வலம் வருபவர் பின்னணி பாடகி மஹதி. உங்கள் அனைவருக்கும் விருதுகளை வழங்குவதில் பெருமைப்படுகிறேன்.

கலைஞர் நூற்றாண்டு விழா ஆண்டில் முத்தமிழ் பேரவைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்த ஆண்டு முதல் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் விருதினை, முத்தமிழ் பேரவை சார்பில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். முத்தமிழுக்கு சிறப்புற தொண்டாற்றுபவர்களுக்கு இந்த விருதை வழங்கவேண்டும். பொதுவாக முதலமைச்சர் பங்கேற்கும் விழாவில் முதலமைச்சரிடம்தான் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் இங்கே நான் முத்தமிழ் பேரவையின் செயலாளர் இயக்குனர் அமிர்தம் அவர்களின் மீது உள்ள உரிமையின் காரணமாக இந்த கோரிக்கையை வைத்திருக்கிறேன். அதை அவர் தட்டாமல் ஏற்றுக்கொள்வார் என நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News