தமிழ்நாடு

இலங்கை தூதரகத்துக்கு நாளை அழைத்துச் செல்லப்படும் முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்

Published On 2024-03-12 10:33 GMT   |   Update On 2024-03-12 10:33 GMT
  • நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
  • நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், நளினி உள்பட 7 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு முன்கூட்டியே விடுவித்தது.

முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை குடிமகன் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இவர்கள், இலங்கை மற்றும் இங்கிலாந்து செல்ல சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, முருகன் உள்ளிட்டோருக்கு பாஸ்போர்ட் வாங்குவதற்கு நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆர்.முனியப்பராஜ், முருகனின் நேர்காணலுக்காக நாளை அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்ததாகவும் நாளை அவர்களையும் அழைத்துச் செல்ல உள்ளதாகவும் கூறினார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாளை அதிகாலை 5 மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 

Tags:    

Similar News