தமிழ்நாடு செய்திகள்

கொலையுண்ட அஜித்

ரவுடி தலை துண்டித்து படுகொலை: நள்ளிரவில் காரில் கடத்தி மர்மநபர்கள் வெறிச்செயல்

Published On 2023-09-09 12:02 IST   |   Update On 2023-09-09 12:02:00 IST
  • வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
  • கூலிப்படை கைவரிசையா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே ரவுடி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு;-

காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால் பேட்டை அருகே உள்ள வெண்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் அஜித். 25 வயதான இவர் ரவுடியாக வலம் வந்தார்.

நேற்று இரவு இவர் வெண்குடி கிராமத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் அஜித்தை குண்டுகட்டாக காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர். நள்ளிரவு நேரம் என்பதால் இதனை யாரும் பார்க்கவில்லை. இந்நிலையில் இன்று காலையில் அஜித் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலை அருகில் உள்ள தாங்கி கிராமத்தில் கோவில் ஒன்றின் அருகில் கிடந்தது. இது பற்றிய தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் கிடைத்ததும் வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் அஜித்தை கடத்தி கொலை செய்திருக்கும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. இதையடுத்து உடல் எங்கே என்று போலீசார் தேடினர். அப்போது அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள வள்ளுவப்பாக்கம் கிராமத்தில் உடல் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

வள்ளுவப்பாக்கம் பகுதியில் தண்டவாளம் அருகே கிடந்த அஜித்தின் உடலை கைப்பற்றிய போலீசார் தலை மற்றும் உடலை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரவுடி அஜித்தை மர்ம நபர்கள் திட்டம் போட்டு கடத்தி கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொடூர கொலை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ரவுடிக்கும்பலை சேர்ந்தவர்களே ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.சம்பவ இடத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், துணை சூப்பிரண்டு ஜூலியர் சீசர், வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். கூலிப்படை கைவரிசையா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலையுண்ட அஜித் மீது வாலாஜாபாத், சாலவாக்கம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. கடந்த 6 மாதத்துக்கு முன்பு முத்தியால்பேட்டை செல்லியம்மன் நகரில் கஞ்சா போதையில் ஒரு வீட்டுக்குள் சென்று கலாட்டா செய்ததாக அஜித் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. இதில் கைதான இவர் ஒரு மாதத்துக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். இந்த நிலையில் தான் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.

Tags:    

Similar News