தமிழ்நாடு

அரிசி கொம்பன் யானை தஞ்சமடைந்துள்ள வனப்பகுதி அருகே சோதனைச்சாவடி அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் வனத்துறையினர், போலீசார்.

உடல் நலம் பாதிப்பால் ஒரே இடத்தில் தஞ்சம்- அரிசி கொம்பன் யானையை நினைத்து மூணாறு மக்கள் கவலை

Published On 2023-06-02 05:20 GMT   |   Update On 2023-06-02 05:20 GMT
  • அரிசி கொம்பனை பிடிக்க வரவழைக்கப்பட்ட 3 கும்கிகளும் கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
  • கம்பம், சின்னமனூர், சரகங்களைச் சேர்ந்த வனத்துறையினர் மட்டும் அரிசி கொம்பனை கண்காணித்து வருகின்றனர்.

உத்தமபாளையம்:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றி வந்த அரிசி கொம்பன் காட்டு யானை கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்டது.

அதன் பின்பு அங்கேயே சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் கடந்த மாதம் 27-ந் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் அதிரடியாக புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அங்கிருந்து சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புகுந்த அரிசி கொம்பன் சண்முகா நதி அணைப்பகுதியில் தஞ்சமடைந்தது. கடந்த 5 நாட்களாக அதே பகுதியில் உள்ள அரிசி கொம்பன் யானைக்கு பார்வை குறைபாடு மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது.

அதற்கு தேவையான உணவை வனத்துறையினர் வைத்து விட்டு வந்து விடுகின்றனர். குறிப்பாக அரிசி, பலாப்பழங்கள் ஆகியவற்றை வைப்பதால் அதனை உண்டு வருகிறது. மேலும் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் அதற்கு இதமான சூழல் ஏற்பட்டுள்ளது.

சாந்தமாக இருந்தாலும் மக்கள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் சத்தம் போட்டவாறே நகர்ந்து வருகிறது. இதனால் அதன் செய்கையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி தலைமையில் நூற்றுக்கும் அதிகமான வனத்துறையினர் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து முகாமிட்டுள்ளனர்.

அரிசி கொம்பனை பிடிக்க வரவழைக்கப்பட்ட 3 கும்கிகளும் கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. யானையை பிடிக்க வரவழைக்கப்பட்ட தெப்பாக்காடு மற்றும் குரங்கணி பகுதியைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் 22 பேரும் கடந்த 3 நாட்களாக ஓவுலாபுரம் வனப்பகுதியில் தங்கியுள்ளனர்.

அங்குள்ள பெருமாள் கோவிலை அரிசி கொம்பன் சுற்றி வருகிறது. கம்பம், சின்னமனூர், சரகங்களைச் சேர்ந்த வனத்துறையினர் மட்டும் அதனை கண்காணித்து வருகின்றனர்.

ஏற்கனவே அரிசி கொம்பனுக்கு மயக்க ஊசி செலுத்திய கேரள டாக்டர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. பொதுவாக மரங்கள் மற்றும் பாறைகளின் மேல் நின்று மயக்க ஊசி செலுத்த வேண்டும். ஆனால் அரிசி கொம்பனை அவ்வாறு செய்ய முடியாது. ஏதாவது வாகனங்களின் மீது அமர்ந்து 10 அல்லது 15 அடி தூரத்தில் இருந்து மயக்க ஊசியை செலுத்த வேண்டும். அந்த சமயத்தில் அது எதிர்தாக்குதல் நடத்த வாய்ப்பு உண்டு.

அப்போது வாகனங்களை பயன்படுத்த வேண்டும். பொதுவாக யானைகளை விரட்ட பட்டாசு கொளுத்தினால் அது மிரண்டு ஓடும். ஆனால் அரிசி கொம்பன் பட்டாசு கொளுத்திய திசையை நோக்கி ஓடி வரும் என்பதால் அது போன்ற செய்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் அதிக நாட்கள் சுற்றி வந்த அரிசி கொம்பன் தற்போது உடல் நலம் குன்றி காணப்படுவதாக அறிந்த செய்தி கேட்டு அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், அரிசி கொம்பன் பார்ப்பதற்கு மற்ற யானைகளைக் காட்டிலும் பிரம்மிப்பான தோற்றத்தில் இருக்கும். அதற்கு தேவையான இரை கிடைத்து விட்டால் யாரையும் தொந்தரவு செய்யாது. யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியில் குடியிருப்புகள் இருப்பதால் அதனை நோக்கி நகர்ந்து வருகிறது.

பெரும்பாலும் அரிசி கொம்பன் கூரை வேயப்பட்ட வீடுகளையே குறி வைத்து சேதப்படுத்தும். ஏனெனில் அங்குதான் அரிசி இருக்கும் என்பதை அது நன்றாக உணர்ந்துள்ளது. கடந்த மாதம் ஹைவேவிஸ் தொழிலாளர்கள் குடியிருப்பில் 10 நாட்கள் சுற்றி வந்த போதும் யாரையும் எதுவும் செய்யவில்லை.

ரேசன் கடை ஜன்னலை மட்டும் உணவுக்காக சேதப்படுத்தியது. தற்போது அதன் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் வனத்துறையினர் உரிய சிகிச்சை அளிக்க முன் வர வேண்டும் என்றனர். அரிசி கொம்பன் யானைக்கு மூணாறு பகுதியில் ரசிகர் மன்றம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்குள்ள ஜீப் டிரைவர்கள் சார்பில் அரிசி கொம்பன் தேனீர் கடை தொடங்கப்பட்டது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் யானை உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News