தமிழ்நாடு

நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை- முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்வு

Published On 2023-07-05 04:40 GMT   |   Update On 2023-07-05 04:40 GMT
  • கேரளாவில் பல்வேறு மாட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
  • வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும்.

கூடலூர்:

தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார்வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்தது.

மேலும் கேரளாவில் பல்வேறு மாட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அதன்படி இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த பல மாதங்களாக நீர்வரத்து குறைவாக இருந்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இந்த நிலையில் இடுக்கி பகுதியிலும் நீர்பிடிப்பு பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் 112 கன அடியாக இருந்த நீர்வரத்து 602 கன அடியாகவும் மாலையில் 1200 கன அடியாகவும் அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 2113 கன அடிநீர் வருகிறது. இதனால் நேற்று 114.95 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 115.80 அடியாக உள்ளது. 256 கன அடி நீர் வருகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 49.97 அடியாக உள்ளது. 48 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.90 அடியாக உள்ளது. 19 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.86 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 87.2, தேக்கடி 60, கூடலூர் 5.4, உத்தமபாளையம் 4.4. சண்முகாநதி 3.8, போடி 4.6, வைகை அணை 6.4, சோத்துப்பாறை 2, மஞ்சளாறு 1, பெரியகுளம் 1.2, வீரபாண்டி 21.6, அரண்மனைபுதூர் 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்று காலையும் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்தது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இதனால் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும். தற்போது நீர்மட்டம் குறைவாக உள்ளதால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே மழை கைகொடுக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் உயரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News