தமிழ்நாடு

நெல்லை கண்ணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள்

Published On 2022-08-18 17:25 GMT   |   Update On 2022-08-18 17:25 GMT
  • தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் தமிழ் வளர்ச்சித்துறையின் இளங்கோவடிகள் விருதினை பெற்றவர்
  • நெல்லை கண்ணன் மறைவு தமிழ்நாட்டிற்கும், தமிழ் இலக்கிய உலகிற்கும் ஒரு பெரிய இழப்பு

நெல்லை:

தமிழறிஞரும் பேச்சாளருமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் இன்று காலமானார். அன்னாரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, மாண்புமிகு வருவாய் மற்றும் போரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நெல்லை கண்ணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜூ, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

பின்னர் அமைச்சர் இராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்த உடனே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னாரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்க்கடல் நெல்லை கண்ணனின் வீட்டிற்கு நேரில் சென்று அன்னாரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்குமாறு கூறினார்.

அதனைத் தொடர்ந்து நானும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் இன்று தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளோம்.

தமிழ்க்கடல் நெல்லை கண்ணனுக்கு தமிழ் வளர்ச்சித்துறையின் இளங்கோவடிகள் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தின் நல்ல மேடை பேச்சாளரும், தமிழ் இலக்கியவாதியாகவும், தமிழ் சொற்பொழிவாராகவும் திகழ்ந்தவர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன். அவரது மறைவு தமிழ்நாட்டிற்கும், தமிழ் இலக்கிய உலகிற்கும் ஒரு பெரிய இழப்பு, தமிழ்க்கடல் நெல்லை கண்ணனை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாகவும், ஆறுதல் தெரிவித்துள்ளோம். அன்னாரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, திருநெல்வேலி வட்டாட்சியர் செல்லசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News