தமிழ்நாடு

அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசிய விவகாரம்: வருத்தம் தெரிவித்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்

Published On 2023-10-10 04:15 GMT   |   Update On 2023-10-10 04:15 GMT
  • நீதிபதி முறையாக அனுமதி பெற்று மீண்டும் ஒரு பொதுக் கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில் குமரகுரு மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டார்.
  • கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அமைதியான சூழல் காணப்பட்டது.

கள்ளக்குறிச்சி:

அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசிய விவகாரத்தில் பொதுக்கூட்டம் நடத்தி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வருத்தம் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் கடந்த மாதம் 19-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதை கண்டித்து மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.

இதனால் குமரகுரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து முன்ஜாமீன் பெற சென்னை ஐகோர்ட்டில் குமரகுரு மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி முறையாக அனுமதி பெற்று மீண்டும் ஒரு பொதுக் கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில் குமரகுரு மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டார்.

கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் அ.தி.மு.க. மதுரை மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற மாவட்ட செயலாளர் குமரகுரு, அமைச்சர் உதயநிதி குறித்து நான் அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பேச்சு புண்படும் படி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அப்போதே சமூகவலை தளங்கள் வழியாக தெரிவித்து இருந்தேன். இப்போதும் இந்த கூட்டத்தின் வாயிலாக அவ்வாறு புண்படும் படி பேசி இருந்தால் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அமைதியான சூழல் காணப்பட்டது.

Tags:    

Similar News