தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது- அமைச்சர் அறிவுறுத்தல்

Published On 2022-09-27 10:09 GMT   |   Update On 2022-09-27 10:09 GMT
  • ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது
  • அரசு பேருந்து கட்டணத்துடன், ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம் என அமைச்சர் பேட்டி

சென்னை:

தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, ஆம்னி பேருந்துகளின் அனைத்து சங்கத்தினரும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகளை சென்னை எழிலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் போக்குவரத்து துறை செயலாளர் கோபால், ஆணையர் நிர்மல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பண்டிகை காலங்களில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பின்னா செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், இரண்டொரு நாளில் கட்டணம் குறித்த முடிவை அரசிடம் தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர் என்றார். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு பேருந்து கட்டணத்துடன், ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம் என்றும், ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிக்கவில்லை என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

Tags:    

Similar News