கருமாத்தூரில் பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தினர்.
கறவை மாடுகளுடன் சாலையில் பாலை கொட்டி போராட்டம்- கொள்முதல் விலையை உயர்த்தி தர கோரிக்கை
- தகவல்அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- கால் நடைகளுக்கான தீவனம், மருத்துவ மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்து வருகிறது.
உசிலம்பட்டி:
தமிழகம் முழுவதும் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மாவட்டத்திலும் கடந்த 2 வாரங்களாக உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி இன்று காலை உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர் சாலையில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் திரண்டனர். கறவை மாடுகளுடன் வந்த அவர்கள் சாலையில் பாலை கொட்டி திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக அரசு பால் கொள்முதல் விலையை ரூ. 7 முதல் ரூ. 10 வரை உயர்த்தி தரவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வெண்மணி சந்திரன், செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல்அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் மறியல் கைவிடப்பட்டது.
இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், கால் நடைகளுக்கான தீவனம், மருத்துவ மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்து வருகிறது. இதனால் மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்போர் கடும் சிரமத்தில் உள்ளனர். எனவே தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும்.
இதுதொடர்பாக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என்றனர்.