சென்னையை நெருங்கும் மிச்சாங் புயல்: வெளுத்து வாங்கும் மழை- பரங்கிமலை மெட்ரோ மூடல்
- சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
- ரெயில் நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் மிச்சாங் புயலாக உருவானது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில மழை தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 130 கி.மீ. தொலைவில் மிச்சாங் புயல் நிலை கொண்டுள்ளது. வடதமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே நாளை நாளை முற்பகல் தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை காரணமாக சென்னை பரங்கிமலை பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4 அடி மழை வெள்ளம் தேங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மெட்ரோ ரெயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தை பயன்படுத்தி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், மயிலாப்பூர் போன்ற இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.