மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21 ஆயிரத்து 600 கன அடியாக நீடிப்பு
- ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
- காவிரியில் 14,000 கன அடி தண்ணீரும் கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் என மொத்தம் 14,600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது .
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 11,600 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 24,100 கன அடியாக அதிகரித்தது. மாலையில் மீண்டும் நீர்வரத்து 21,600 கன அடியாக சரிந்தது.
இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 14,600 கன அடியானது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி காவிரியில் 14,000 கன அடி தண்ணீரும் கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் என மொத்தம் 14,600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது .
மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிப்பதால் இனிவரும் நாட்களிலும் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.