தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 15 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2023-11-20 05:05 GMT   |   Update On 2023-11-20 05:05 GMT
  • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது.
  • கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 149 கனஅடியாக இருந்தது.

சேலம்:

மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

இதையடுத்து கடந்த மாதம் 10-ந் தேதி முதல் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேலும் இந்த மாதம் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தது.

இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 61.83 அடியாக இருந்த நிலையில் இன்று 62.24 அடியாக உயர்ந்து விட்டது.

மேலும் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 3 ஆயிரத்து 198 கனஅடியாக இருந்த நிலையில் இன்று வினாடிக்கு 4 ஆயிரத்து 15 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து குடிநீர்தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 26.83 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 149 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1332 கனஅடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து வாய்க்கால் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 4152 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News