தொழில்நுட்ப கோளாறு: சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு
- சென்னை சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் இடையே செல்லும் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- தொழில்நுட்பக் கோளாறால் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற வற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதனால் தினமும் 3.25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மீனம்பாக்கம்-விமான நிலையம் மெட்ரோ ரெயில் நிலையங்கள் இடையே இன்று அதிகாலையில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமான நிலையத்தில் இருந்து சென்ட்ரலுக்கு நேரடியாக மெட்ரோ ரெயில்களை இயக்க முடியவில்லை. ஆலந்தூர்-விமான நிலையம் இடையே சேவை முடங்கியது.
தொழில்நுட்ப வல்லுனர்கள் கோளாறை சரி செய்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படும் என்று கூறியதால் அந்த வழித்தடத்தில் சேவை இன்று முழுவதும் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகள் விமான நிலையத்திற்கு பச்சை நிற வழித்தடம் வழியாக செல்ல ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறங்கி மாறிச் செல்ல வேண்டும். பச்சை மற்றும் நீல நிற வழித்தடத்தில் வழக்கம் போல மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
விம்கோ நகர் டெப்போவில் இருந்து விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து பரங்கிமலை நிலையம் வரை வழக்கம் போல் இயக்கப்படுகிறது.
சென்ட்ரல்-விமான நிலையம் இடையே நேரடி சேவை ரத்து செய்யப்பட்டதால் மக்கள் ஆலந்தூரில் மாறி செல்ல வேண்டியது இருந்தது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். வழக்கமாக காலை நேரத்தில் மெட்ரோ ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒரு பகுதி சேவை ரத்து செய்யப்பட்டதால் சிரமத்திற்கு ஆளானார்கள்.