தமிழ்நாடு செய்திகள்

மகா தீப கொப்பரைக்கு ஆசி வழங்கிய யானை ருக்கு (பழைய படம்).

திருவண்ணாமலை கோவில் யானை "ருக்கு"வுக்கு ரூ.49 லட்சத்தில் மணிமண்டபம்: கலெக்டர் அடிக்கல் நாட்டினார்

Published On 2023-09-13 11:03 IST   |   Update On 2023-09-13 11:03:00 IST
  • மணிமண்டபம் கட்டுவதற்கான கட்டுமான பணியை இன்று காலை திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
  • கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து விரைவில் கோவிலுக்கு யானையை கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் வலியுத்தினர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந்தேதி அதிகாலையில் கோவில் வளாகத்தில் இறந்தது.

பின்னர் கோவில் அருகிலேயே ருக்குவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 7 வயதில் கோவிலுக்கு வந்த ருக்கு 23 ஆண்டுகளாக ஆன்மிக பணியை செம்மையாக செய்தது. தனது 30-வது வயதில் மரணம் அடைந்தது.

கோவில் வளாகத்தின் அருகில் யானை ருக்கு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.49 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட உள்ளது.

மணிமண்டபம் கட்டுவதற்கான கட்டுமான பணியை இன்று காலை திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

இதில் கோவில் இணை ஆணையர் ஜோதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், மணியம் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற சிவத்தலமான திருவண்ணாமலை கோவிலில் யானை ருக்கு இறந்து 5½ ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை யானை இல்லாத நிலையே உள்ளது.

கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து விரைவில் கோவிலுக்கு யானையை கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் வலியுத்தினர்.

Tags:    

Similar News