தமிழ்நாடு செய்திகள்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஓட்டு கேட்டு கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பேசியபோது எடுத்த படம்.

ரப்பர் ஸ்டாம்பாக செயல்பட மாட்டேன்- மல்லிகார்ஜுன கார்கே

Published On 2022-10-15 08:34 IST   |   Update On 2022-10-15 08:34:00 IST
  • ஒரு குடும்பம்-ஒரு பதவி, எல்லா மட்டங்களிலும் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு போன்றவற்றை நிறைவேற்றுவேன்.
  • மோடியும், அமித்ஷாவும் இந்தியாவின் ஒற்றுமையை பிரிக்க பார்க்கிறார்கள்.

சென்னை:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மல்லகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிடுகின்றனர். இதில், அகில இந்திய அளவில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் 711 பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த நிலையில், 2 தலைவர்களும் தங்களுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

கடந்த 6-ந் தேதி சசிதரூர் சென்னை சத்தியமூர்த்தி பவன் வருகை தந்து வாக்குகள் சேகரித்தார். அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்து வரவேற்பு அளிக்கவில்லை. இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் தனக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார். அவருடன் கேரள மாநில முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, முன்னாள் தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மத்திய மந்திரி நாராயணசாமி, புதுவை வைத்திலிங்கம் எம்.பி., புதுவை மாநில முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்து இருந்தனர். உட்கட்சி தேர்தல் விதிமுறைகளின்படி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மேடைக்கு கீழே முதல் வரிசையில் அமர்ந்து இருந்தனர்.

கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

உங்களிடம் ஆசீர்வாதமும், வாக்குகளையும் பெற வந்தேன். கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். மற்றவர்கள் போல என்னிடம் எந்த வாக்குறுதியும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளே எனது வாக்குறுதி. கடந்த 4 மாதங்களுக்கு முன் உதய்ப்பூர் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை செயல்படுத்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவேன். கட்சியில் காலியாக உள்ள இடங்களுக்கு உடனடியாக ஆட்களை நியமிப்பேன்.

ஒரு குடும்பம்-ஒரு பதவி, எல்லா மட்டங்களிலும் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு போன்றவற்றை நிறைவேற்றுவேன். ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஆனால், மோடியும், அமித்ஷாவும் இந்தியாவின் ஒற்றுமையை பிரிக்க பார்க்கிறார்கள். எனவே, மோடி, அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவேன்.

1969-ல் காங்கிரஸ் கட்சியின் பகுதி தலைவராக பொறுப்பேற்று படிப்படியாக பல்வேறு பதவிகளை அடைந்து, இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அளவிற்கு வந்துள்ளேன். நான் ஏணியின் அடிப்பகுதியில் இருந்து படிப்படியாக மேலே ஏறி வந்தவன். சிலர் (சசிதரூர்) நேராக மேலே இருந்துவிட்டு இப்போது கீழே பார்க்கிறார்கள். அவர்களுக்கு பெரிய பள்ளமாக தெரிகிறது.

நான் செல்கிற இடங்களில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதே நேரத்தில் நான் செல்கிற இடங்களில் எல்லாம் பத்திரிகையாளர்கள் என்னிடம் நீங்கள் ரிமோட் கண்ட்ரோலாக செயல்படுவீர்களா? ரப்பர் ஸ்டாம்பாக செயல்படுவீர்களா? என்று கேட்கிறார்கள். நான் அப்படி ஒன்றும் செயல்பட மாட்டேன். நான் கட்சியின் கீழ் மட்டத்தில் இருந்து வந்தவன். நான் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை செயல்படுத்துவேன். அதுவும் உங்களுடன் (காங்கிரஸ் நிர்வாகிகளுடன்) இணைந்து செயல்படுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் துணை தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர்கள் காண்டீபன், தளபதி பாஸ்கர், ஆர்.டி.ஐ.பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், எம்.எஸ்.திரவியம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News