தமிழ்நாடு செய்திகள்

நம்பர் பிளேட்டுகளில் தலைவர்கள்-நடிகர்கள் படங்களை ஒட்டினால் கடும் நடவடிக்கை: மதுரை ஐகோர்ட்

Published On 2022-12-02 14:44 IST   |   Update On 2022-12-02 14:44:00 IST
  • இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் போர்டுகளில் அரசு விதிமுறையின்படி அந்த வண்டியின் நம்பர் மட்டுமே இடம்பெற வேண்டும்.
  • விதிமீறிய வண்டிகளை பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதங்கள் விதிக்க வேண்டும்.

மதுரை:

கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய, மாநில அரசுகளின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அரசு பிறப்பித்துள்ள முறையில் தான் நம்பர் பிளேட் இருக்க வேண்டும்.

ஆனால் மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிராக வாகன உரிமையாளர்கள் தாங்கள் விரும்பிய அரசியல் கட்சியினர் மற்றும் நடிகர்களின் படங்களை நம்பர் பிளேட்டில் எழுதுவது மற்றும் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நம்பர் எழுதி கொள்கின்றனர். இது சட்டவிரோதமானது.

இதுகுறித்து மாவட்ட போக்குவரத்து அதிகாரிகள், காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சட்டவிரோதமாக இருக்கும் வாகனத்தின் நம்பர் போர்டுகளை அகற்ற உத்தரவிட வேண்டும். விதிகளை மீறி இருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திலக் குமார் ஆஜராகி பேசும்போது, மனுதாரர் சந்திரசேகர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கும்போது கோரிக்கையை மட்டும் வைக்கவில்லை சட்டவிரோத நம்பர் போர்டுகளை அகற்றவில்லை எனில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் உத்தரவின் பேரில் நாங்களே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என மிரட்டும் வகையில் மனு அளித்துள்ளார் என்பதை சுட்டி காட்டினார்.

இதனை படித்து பார்த்த நீதிபதிகள் கடும் கோபம் அடைந்தனர். ஒரு கோரிக்கை வைக்கும்போது இதுபோன்று மிரட்டும் தொனியில் மனுவின் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மனுதாரருக்கு அதிகபட்ச அபராதம் விதிப்போம் என கூறினர்.

மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் போர்டுகளில் அரசு விதிமுறையின்படி அந்த வண்டியின் நம்பர் மட்டுமே இடம்பெற வேண்டும். வேறு எந்த வகையிலும் எழுத்தோ தலைவர்களின் படமோ, நடிகர்களின் படமோ இடம்பெற கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வாகன போக்குவரத்து அதிகாரிகள், காவல்துறையினர் இதுகுறித்து தினந்தோறும் வாகன சோதனை நடத்த வேண்டும்.

விதிகளை மீறிய நம்பர் போர்டுகளை அகற்ற வேண்டும். விதிமீறிய வண்டிகளை பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதங்கள் விதிக்க வேண்டும். இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

Similar News