தமிழ்நாடு

கிராம உதவியாளரை பணிநீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பியதற்கு தடை- மாவட்ட கலெக்டர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு

Published On 2023-06-20 07:59 GMT   |   Update On 2023-06-20 07:59 GMT
  • மனுதாரர் பிற்படுத்தப்பட்டோருக்கான சிறப்பு மாற்றுத்திறனாளி பிரிவில் இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் பெற்றுள்ளார்.
  • மாவட்ட கலெக்டர் தவறாக புரிந்து கொண்டு மனுதாரர் பணி நியமனத்தை ரத்து செய்ய முயற்சிக்கின்றனர் என கூறினார்.

மதுரை:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

60 சதவீதம் மாற்றுத்திறனாளியான நான், கடந்த டிசம்பர் மாதம் முத்தையாபுரம் ஊராட்சி எழுத்தர் பணிக்கு முறைப்படி விண்ணப்பித்து தேர்வு எழுதினேன். மேலும் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவில் தேர்வு செய்யப்பட்டு கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன்.

இந்நிலையில் எனக்கு வழங்கப்பட்ட பணியானது இட ஒதுக்கீடு அடிப்படையில் தவறாக வழங்கப்பட்டுள்ளதாக கூறி என்னை பணியிலிருந்து நீக்குவதாக கலெக்டர் எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எனவே எனக்கு அனுப்பிய மாவட்ட கலெக்டரின் நோட்டீசுக்கு தடை விதித்து, நான் தொடர்ந்து கிராம உதவியாளராக பணியாற்ற அனுமதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் மாரீஸ் குமார் ஆஜராகினார். அவர் மனுதாரர் பிற்படுத்தப்பட்டோருக்கான சிறப்பு மாற்றுத்திறனாளி பிரிவில் இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் பெற்றுள்ளார். ஆனால் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பெற்றுள்ளதாக மாவட்ட கலெக்டர் தவறாக புரிந்து கொண்டு மனுதாரர் பணி நியமனத்தை ரத்து செய்ய முயற்சிக்கின்றனர் என கூறினார்.

இதனை பதிவு செய்த நீதிபதி, மாவட்ட கலெக்டரின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தும், இந்த வழக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உரிய பதில் அளிக்கும்படியும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Tags:    

Similar News