மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் அறிவிப்பு
- இலக்கியத் துறையில் பல ஆண்டுகளாகப் பங்களித்து வரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
- விருது பெறவுள்ள பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் முதுபெரும் தமிழறிஞரான மு.வரதராசனாரின் மாணவர் ஆவார்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாக இருப்பவர் ஆர்.மகாதேவன். இவரது தந்தை மா.அரங்கநாதன் மிகப்பெரிய எழுத்தாளர். பல்லாயிரம் ஆண்டு தமிழ் கலாசாரத்தை தன்னுடைய கவிதை, சிறுகதை, நாவல் மூலம் வெளிப்படுத்தியவர்.
இவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16-ந்தேதி, 'மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகளை, முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
அதாவது, இலக்கியத் துறையில் பல ஆண்டுகளாகப் பங்களித்து வரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டு, இந்த விருதை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், எழுத்தாளர் கு.வெ.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் வருகிற 16-ந்தேதி நடக்கிறது. அப்போது, நீதிபதி ஆர்.மகாதேவன் விருதுகளை வழங்குகிறார். அதைத்தொடர்ந்து, 'மா.அரங்கநாதன் படைப்புகள்', 'பொருளின் பொருள் கவிதை' ஆகிய நூல்களையும் வெளியிட உள்ளார்.
விருது பெறவுள்ள பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் முதுபெரும் தமிழறிஞரான மு.வரதராசனாரின் மாணவர் ஆவார். "வைணவ உரைவளம்" என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றிய இவர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித் துறையிலும் பணியாற்றியுள்ளார். தமிழ் மொழியை வளர்ப்பதற்காக 37 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
எழுத்தாளர் கு.வெ.பா என்கிற கும்பகோணம் வெங்கடாசலம் பாலசுப்பிரமணியன் கவிதை, கதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு, கற்பித்தல் எனப் பல துறைகளிலும் தடம் பதித்தவர். 100-க்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை இவர் எழுதியுள்ளார். கு.வெ.பாலசுப்பிரமணியன் எழுதிய பக்தி நூல்கள் பல இலங்கை மற்றும் பிரான்சில் உள்ள கோவில்களில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.