தமிழ்நாடு செய்திகள்

ரூ.10-க்கு சுடச்சுட இட்லி, சாதம்: ஈரோடு மலிவு விலை உணவகத்தில் குவியும் பொதுமக்கள்

Published On 2023-05-31 10:57 IST   |   Update On 2023-05-31 10:57:00 IST
  • காலை 500 பேருக்கும், மதியம் 500 பேருக்கும், இரவு 500 பேருக்கும் என நாள் ஒன்றுக்கு 1,500 பேருக்கு தற்போது உணவு வழங்கப்பட்டு வருகிறது.
  • வயதானவர்கள், கூலி தொழிலாளர்கள், குழந்தைகள் குடும்பம் குடும்பமாக வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு விசைத்தறி, மஞ்சள், ஜவுளி, தோல் தொழிற்சாலைகள் அதிகளவில் இயங்கி வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஈரோடு பிரப் சாலையில் புதிய உணவகம் தொடங்கப்பட்டு உள்ளது. ஆற்றல் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில் மலிவு விலையில் ரூ.10-க்கு உணவு கிடைக்கிறது. காலை 8 மணி முதல் 10 மணி வரை சுடச்சுட இட்லி, சாம்பார், சட்னியும், மதியம் 12 மணி முதல் 2 மணி வரை சாதம், சாம்பார், பொரியல், மோர் மற்றும் ஊறுகாயும், இரவு 7 மணி முதல் 9 மணி வரை இட்லி, சாம்பார், சட்னியும் சுடச்சுட வழங்கப்படுகிறது.

இங்கு ரூ.10 கட்டணத்தில் பசியாற விரும்புவோருக்கு ருசியான தரமான உணவை வாரம் 7 நாட்களும் காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் அளவில்லா உணவு வழங்கப்படுகிறது. இதற்காக சிறந்த சமையல் கலைஞர்கள், ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து உணவு சாப்பிடும் இடவசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த உணவகம் ஈரோட்டில் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. காலை 6.30 மணி முதலே உணவகத்தில் மக்கள் சாப்பிடத் திரண்டு விடுகின்றனர். கூட்டம் அலைமோதுவதால் வரிசையில் பொதுமக்கள் நின்று சாப்பிட்டு செல்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இட்லி தீர்ந்து விடுகிறது.

இதேபோல் மதியம் 40 நிமிடங்களுக்குள்ளாகவே சாதம் தீர்ந்து விடுகிறது. இரவும் இதே நிலைமை தான் இருக்கிறது. சாதாரண கூலி தொழிலாளர்கள் ஏழைகள் மட்டுமின்றி வசதி படைத்தவர்களும் குடும்பமாக வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.

சாப்பிட வருபவர்களிடம் உணவை வீணடிக்க வேண்டாம் என்று கூறி தான் உணவு பரிமாறப்படுகிறது. சாப்பிட்டு முடித்ததும் அவர்களே தட்டுகளை கழுவி ஊழியரிடம் கொடுக்க வேண்டும். நல்ல காற்றோட்ட வசதியுடன் உணவு அருந்தும் வகையில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. சாப்பிட வருபவர்களுக்கு ஆர்.ஓ. வாட்டர் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆற்றல் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஆற்றல் அசோக்குமார் கூறியதாவது:-

ஆற்றல் அறக்கட்டளை சார்பில் ஏராளமான சமுதாய பணிகள் செய்து வருகிறோம். எங்கள் அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் அனைவருக்கும் சம உரிமை வழங்குவது தான்.

எங்கள் அறக்கட்டளை மூலம் கிராமப்புற பள்ளிகளை மேம்படுத்துதல், சமுதாயக்கூடம் கட்டி கொடுத்தல், ஆட்டோ டிரைவர்கள், கூலித்தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர்களை பாராட்டி கவுரவித்தல் உள்பட ஏராளமான சேவைகளை ஆற்றி வருகிறோம்.

தற்போது புதிய முயற்சியாக பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு மலிவான விலையில் தரமான உணவு வழங்க முடிவு செய்யப்பட்டு முதல் முறையாக ஆற்றல் அறக்கட்டளை சார்பாக மலிவு விலை உணவகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

முதலில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் உணவின் மதிப்பு தெரியாமல் போய்விடும் என்பதால் 10 ரூபாய் கட்டணத்தில் காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் தலா ரூ.10-க்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

காலை 500 பேருக்கும், மதியம் 500 பேருக்கும், இரவு 500 பேருக்கும் என நாள் ஒன்றுக்கு 1,500 பேருக்கு தற்போது உணவு வழங்கப்பட்டு வருகிறது. பார்சல் வசதி கிடையாது. பொதுமக்கள் நேரடியாக உணவகத்திற்கு வந்து சாப்பிட்டு செல்லலாம்.

இதன் முக்கிய நோக்கம் அனைத்து தரப்பு மக்களும் வயிறார தரமான உணவை சாப்பிட்டு செல்ல வேண்டும் என்பதுதான். உணவகம் தொடங்கி சில நாட்களே ஆகிறது. ஆனால் பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

வயதானவர்கள், கூலி தொழிலாளர்கள், குழந்தைகள் குடும்பம் குடும்பமாக வந்து சாப்பிட்டு செல்கின்றனர். சாப்பிட வருபவர்களிடம் உணவை வீணாக்க வேண்டாம் என அன்பு கட்டளை இடுகிறோம். ஏனென்றால் கொரோனா காலகட்டத்தில் தான் உணவு அருமை நமக்கு தெரிய வந்தது. உணவுக்காக பலர் கஷ்டப்பட்டனர்.

கொரோனா காலகட்டத்தில் ஆற்றல் அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்களை நேரடியாக சென்று சந்தித்து உணவு பொட்டலங்களை வழங்கினார்கள். இதன் அடிப்படையிலேயே தற்போது மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்களை காக்க வைக்காமல் இருப்பதற்காக நவீன எந்திரங்கள் மூலம் ஒரே நேரத்தில் 100 இட்லி வரை தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த உணவகத்திற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கும் ஆற்றல் உணவகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News