தமிழ்நாடு

இந்து கோவில்களில் புரட்சியை ஏற்படுத்தியது அறநிலையத்துறை- கே.எஸ்.அழகிரி பேட்டி

Published On 2023-10-05 05:43 GMT   |   Update On 2023-10-05 05:44 GMT
  • கடவுள் முன்பு எல்லோரும் சமம் என்ற புரட்சியை ஏற்படுத்தியது அறநிலையத்துறைதான்.
  • தமிழகத்தின் இந்த வரலாறுகள் தெரியாமல் மோடி பேசி இருக்கிறார்.

சென்னை:

பல மாநிலங்களில் அரசின் பிடியில் இந்து கோவில்கள் இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் கூறுகிறது. தமிழ்நாட்டில் அரசின் கட்டுப்பாட்டில் இந்து கோவில்கள் உள்ளது. அதை எதிர்த்து காங்கிரஸ் குரல் கொடுக்குமா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

அதை தொடர்ந்து தமிழக பா.ஜனதாவினரும் இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.

இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

தமிழகத்தை பொறுத்தவரை அரசின் அறநிலையத்துறை தான் இந்து ஆலயங்களை சீரமைத்தது. தொடர்ந்து சிறப்பாக சீரமைத்து கொண்டிருக்கிறது.

அதற்கு முன்பு தனியாரிடமும், வசதி படைத்தவர்களிட மும் சிக்கி எளியவர்கள் கோவில்களுக்குள் செல்ல முடியாத நிலை இருந்தது. இப்போது எல்லோரும் செல்ல முடிகிறது. நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இருக்கிறது.

தலித்துகளும் கோவில்களுக்கு சென்று வழிபடலாம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. உச்சபட்சமாக தலித் சமூகத்தை சேர்ந்த பரமேஸ்வரன், கக்கன் ஆகியோரை அறநிலையத்துறை அமைச்சராக்கினார் காங்கிரஸ் ஆட்சியில் காமராஜர். கொள்ளையடித்தவர்களிடம் இருந்து கோவில்கள் மீட்கப்பட்டுள்ளது.

கடவுள் முன்பு எல்லோரும் சமம் என்ற புரட்சியை ஏற்படுத்தியது அறநிலையத்துறைதான். தமிழகத்தின் இந்த வரலாறுகள் தெரியாமல் மோடி பேசி இருக்கிறார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் கோவில்கள் கோவில்களாக இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News