தமிழ்நாடு

கொடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமியிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வக்கீல் கமிஷனர் நியமனம்

Published On 2023-11-07 08:49 GMT   |   Update On 2023-11-07 08:49 GMT
  • எடப்பாடி பழனிசாமியிடம் நீதிபதி முன்னிலையில் நேரடியாக விசாரணை செய்யும்போது தான், தீர்வு கிடைக்கும்.
  • வருகிற 14-ந் தேதி ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும்.

சென்னை:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் மான நஷ்டஈடு கோரி கடந்த 2019-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என்பதால் தனது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்யும் வகையில் வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டுமெனக் கோரி எடப்பாடி பழனிசாமி, ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தனக்குள்ள பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக, ஐகோர்ட் வளாகத்துக்குள் வரும்போது, மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே இந்த நடைமுறை சிக்கல்களை தவிர்க்கும் வகையில் வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும். மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை. இந்த வழக்கில் அனைத்து சட்ட நடைமுறைகளையும் முறையாக பின்பற்ற தயாராக உள்ளேன், என தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், இதுதொடர்பாக மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது மேத்யூ சாமுவேல் தரப்பில், மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, "இந்த வழக்கை தொடர்ந்தது எடப்பாடி பழனிசாமி தான். கொடநாடு கொலை வழக்கில் ஏராளமான மர்மங்கள் உள்ளன. ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியாகி உள்ளார்.

அவர் சென்ற மோட்டார் சைக்கிளும், அதன் மீது மோதிய காரும் வெவ்வேறு திசையில் நின்றுள்ளது. இதில் பல குழப்பங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் எடப்பாடி பழனிசாமியிடம், நீதிபதி முன்னிலையில் நேரடியாக விசாரணை செய்யும்போது தான், தீர்வு கிடைக்கும்.

எனவே, அவரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும். வக்கீல் கமிஷனர் மூலம் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய அனுமதிக்க கூடாது" என்று வாதிட்டார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் அனில் குமார் ஆஜராகி வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கிறேன். அவரிடம் வாக்கு மூலத்தை பதிவு செய்யவும் குறுக்கு விசாரணை செய்யவும் வக்கீல் கார்த்திகை பாலன் என்பவரை வக்கீல் கமிஷனராக நியமிக்கிறேன். அவர் வருகிற 14-ந் தேதி ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் எதிர்தரப்பினரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கிறேன்" என்று கூறினார்.

Tags:    

Similar News