தமிழ்நாடு

கே.சி.பழனிசாமி நீக்கப்பட்ட விவகாரம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். 2 வாரத்தில் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2023-02-06 08:48 GMT   |   Update On 2023-02-06 12:13 GMT
  • கொரோனா தொற்று காலத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான கால வரம்பை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
  • அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு என்னை கட்சியில் இருந்து நீக்க அதிகாரமில்லை.

சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, கடந்த 2018-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது நீக்கத்தை எதிர்த்து 2021-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

குறித்த காலத்துக்குள் தாக்கல் செய்யாமல், 3 ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து கே.சி.பழனிசாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், கொரோனா தொற்று காலத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான கால வரம்பை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. எனவே, கால தாமதத்துடன் வழக்கை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். குறித்த காலத்தில் வழக்கு தொடரவில்லை எனக்கூறி தனது மனுவை தள்ளுபடி செய்தது தவறு.

அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு என்னை கட்சியில் இருந்து நீக்க அதிகாரமில்லை எனவும், தன்னை நீக்கியது கட்சியின் ஆரம்பகால விதிகளுக்கு முரணானது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு அப்போது பதவியில் இருந்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

Tags:    

Similar News