கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை சேர்மன் தேர்தலை நடத்தலாம்- மதுரை ஐகோட்டு உத்தரவு
- காலியான பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
- கரூர் மாவட்ட துணை சேர்மன் பதவியை தி.மு.க.வினர் கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை:
கரூர் மாவட்டத்தை சேர்ந்த திருவிகா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கரூர் மாவட்டத்தில் 12 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உள்ளனர். 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் 9 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாக அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். மீதமுள்ள 3 இடங்களில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர்.
கரூர் மாவட்டத்தின் சேர்மனாக கண்ணதாசனும், துணை சேர்மனாக தனுஷ் (எ) முத்துக்குமார் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் 2021 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனுஷ் (எ) முத்துக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
பின்னர் துணை சேர்மன் பதவிக்கான தேர்தல் நடந்தது. அதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி தி.மு.க. உறுப்பினர்கள் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தினர். இதனால் அந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் கரூர் மாவட்ட துணை சேர்மன் பதவியை தி.மு.க.வினர் கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் முழு தேர்தலையும் வீடியோ பதிவு செய்து கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை சேர்மன் பதவிக்கான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள், வருகிற 19-ம் தேதி கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை சேர்மன் பதவிக்கான தேர்தலை நடத்தலாம். தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். தேர்தல் முடிந்த பின் வாக்குகளை எண்ணலாம்.
ஆனால் இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது. இது தொடர்பான அறிக்கையை சீலிட்ட கவரில் வருகிற 22-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை, மனுதாரர் அணுகலாம் என உத்தரவிட்டு, விசாரணையை 22-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.