தமிழ்நாடு செய்திகள்

மொரார்ஜி தேசாயை மடக்கிய கலைஞர்... முப்பெரும் விழாவில் துரைமுருகன் ருசிகர பேச்சு

Published On 2022-09-15 21:46 IST   |   Update On 2022-09-15 21:46:00 IST
  • போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதமாக சென்று மொரார்ஜி தேசாயை சந்தித்திருக்கிறார் கலைஞர்
  • என் வீட்டு தோட்டத்திலே பணம் காய்க்கும் மரமா இருக்கிறது? என மொரார்ஜி தேசாய் கேட்டுள்ளார்

விருதுநகர்:

விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:

அண்ணா மாநிலங்களவைக்கு சென்றபிறகுதான் அவர் அறிவாற்றலை கண்டு அனைவரும் வியந்தனர். அதேபோல் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக முதன் முதலாக டெல்லி சென்றபோது மிக சாதாரணமாக நினைத்தார்கள். மொரார்ஜி தேசாயை பார்க்க போனார். அவரை 5 மணிக்கு சந்திக்க அவகாசம் அளிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடம் லேட்டாக போனார் கலைஞர். அப்போது கலைஞருக்கு வாழ்த்துகூட சொல்லாமல் மொரார்ஜி தேசாய், 'உங்கள் வீட்டு வேலைக்காரனா நான், உங்களுக்காக காத்துக்கொண்டிருப்பதற்கு?' என்று எடுத்தவுடனே நெருப்பை கொட்டியிருக்கிறார்.

அப்போது கலைஞர் கூறுகையில், 'அந்த நாற்காலியில் அமர்வதற்கு கூட எனக்கு மனமில்லை. இருந்தாலும் நெருப்பின் மீது உட்காருவதுபோல் அந்த நாற்காலியில் நான் உட்கார்ந்தேன்' என்று கூறியிருக்கிறார்.

அடுத்து 'எங்கே வந்தீர்கள்? என்று மொரார்ஜி தேசாய் கேட்டிருக்கிறார். நிதி கேட்பதற்கு, என கலைஞர் கூறியிருக்கிறார். அப்போது மொரார்ஜி தேசாய், நிதி எங்கே கொட்டிக்கிடக்கிறது? என் வீட்டு தோட்டத்திலே பணம் காய்க்கும் மரமா இருக்கிறது, உனக்கு அறுத்து கொடுப்பதற்கு? என மீண்டும் சாடியிருக்கிறார்.

அதுவரை பொறுமை காத்த கலைஞர் சொன்னாராம், பணம் காய்க்கும் மரமே உலகத்தில் கிடையாது, பிறகு உங்கள் தோட்டத்தில் எப்படியய்யா இருக்கும்? என்று கேட்டபொழுதுதான், இவரிடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நினைத்துள்ளார்.

பிறகு பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கு, குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு கருணாநிதியால்தான் முடியும் என்று இந்தியாவே ஒப்புக்கொண்டு போனது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News