தமிழ்நாடு செய்திகள்

காவிரியில் இன்று 5 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகா திறக்கவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தமிழகம் முடிவு

Published On 2023-09-13 12:05 IST   |   Update On 2023-09-13 12:05:00 IST
  • கடந்த சில தினங்களாக காவிரி நதியில் தண்ணீர் திறந்து விடும் அணைகளில் முழுமையாக தண்ணீர் நிறுத்தப்பட்டது.
  • தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை:

தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள குறுவை சாகுபடி பயிர் தண்ணீர் கிடைக்காமல் காய்ந்து வருகின்றன.

பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறுவை சாகுபடியை காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகாவை தமிழகம் கேட்டுக்கொண்டது. ஆனால் தண்ணீர் இல்லை என்று கூறி கர்நாடகா தண்ணீர் தர மறுத்தது.

இதையடுத்து காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

அதன்பேரில் காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம் கடந்த மாதம் 29-ந்தேதி நடத்தப்பட்டது. தமிழகம், கர்நாடகாவின் கருத்தை கேட்ட அந்த குழு 15 நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது.

காவிரி ஆணையம் உத்தரவிட்டதால் வேறு வழியின்றி கர்நாடகா அரசு அணைகளில் இருந்து தண்ணீரை திறந்தது. ஆனால் இதை எதிர்த்து கர்நாடகா விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் கர்நாடகா அரசு கடந்த 8-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கும் அளவை குறைத்தது.

கடந்த சில தினங்களாக காவிரி நதியில் தண்ணீர் திறந்து விடும் அணைகளில் முழுமையாக தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர் மட்டம் மளமளவென குறைந்தது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையில் 44 அடி தண்ணீர்தான் உள்ளது.

இந்த நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் திருச்சி காவிரி வடிநீர் கோட்ட தலைமை பொறியாளர் எம்.சுப்பிரமணி, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் பேசுகையில், கர்நாடகம் இதுவரை 61 டி.எம்.சி. தண்ணீர் நிலுவை வைத்துள்ளது. எனவே குறுவை சாகுபடியை காப்பாற்ற தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீரை மேலும் 15 நாட்களுக்கு திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இதை கர்நாடகா பிரதிநிதிகள் ஏற்கவில்லை. அணைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட இயலாது என்று தெரிவித்தனர். ஆனால் அதை காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு உறுப்பினர்கள் ஏற்கவில்லை.

தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கூறியது. இது கர்நாடகாவுக்கு விடுக்கப்பட்ட பரிந்துரை அல்ல உத்தரவு என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு தலைவர் வினீத்குப்தா தெரிவித்தார்.

கர்நாடகாவின் அறிவிப்புகளுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கும் கர்நாடக அரசின் முடிவை ஏற்க இயலாது. காவிரியில் உரிய தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த நிலையில், காவிரியில் மேலும் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இன்று தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படவில்லை.

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை கண்டித்து மாண்டியாவில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். விவசாய சங்கத்தினர் நேற்று மாலை பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சாலை நடுவே டயர்களை கொளுத்திப்போட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஸ்ரீரங்கப்பட்டணாவில் விவசாயிகள் காவிரி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் பெற வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. வருகிற 21-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு மீது விசாரணை நடக்க உள்ளது. அப்போது குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தர விடும்படி தமிழகம் வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News