திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிக்காக கட்டப்பட்டுள்ள சாரம்.
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி மழையால் பாதிப்பு
- கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ந்தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது.
- சிலையில் உள்ள உப்புத் தன்மையை அகற்றுவதற்காக சிலையை சுற்றிலும் காகிதம் ஒட்டும் பணி நடைபெற்றது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவே கடந்த 2000-ம் ஆண்டு 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
இதன்படி உப்புக்காற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சிலையில் உள்ள உப்புத்தன்மை நீக்கப்பட்டு பின்னர் ரசாயன கலவை பூசப்படும். இதன் மூலம் உப்புக்காற்றினால் சிலை சேதமடையாமல் நீண்ட காலம் நீடித்து நிற்கும். இதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ந்தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது. சிலையை சுற்றிலும் இரும்பு சாரங்கள் அமைக்கப்பட்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தினமும் இந்த பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிலையில் உள்ள உப்புத் தன்மையை அகற்றுவதற்காக சிலையை சுற்றிலும் காகிதம் ஒட்டும் பணி நடைபெற்றது. ஒட்டப்பட்ட காகிதத்தை ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தி உப்பு படிந்திருக்கும் அளவு கண்டறியப்படும். பி.எச். மதிப்பு 7 என்ற அளவில் இருந்தால், அதன் பின்னர் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன கலவை சிலையின் மீது பூசப்படும்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை காரணமாக சிலையின் மீது ஒட்டப்பட்டு இருந்த காகிதங்கள் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டன. இதன் காரணமாக மழை குறைந்த பின்னர் மீண்டும் காகிதம் ஒட்டப்பட்ட பின்னர் பராமரிப்பு பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இந்த மாதம் 6-ந்தேதி முடிய வேண்டிய சிலை பராமரிப்பு பணி மேலும் ஒரு மாத காலம் தாமதமாகலாம் என்று சுற்றுலா வளர்ச்சிக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கன்னியாகுமரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த 5 மாதங்களாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட மேலும் ஒரு மாதம் தாமதமாகலாம் என்று தெரிய வருகிறது.