காஞ்சிபுரம் பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர், கழிவு நீரால் பொதுமக்கள் அவதி
- பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் சேர்ந்த கழிவு நீரால் சிலர் சளி, தலைவலி, காய்ச்சல், வாந்தி-பேதி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- ஒவ்வொரு பருவமழை காலத்திலும் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 23-வது வார்டு நேதாஜி தெருவில் கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இந்த பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் மாநகராட்சிக்கு சென்று கழிவுநீரை அகற்றுவது தொடர்பாக புகார் மனு அளித்தனர்.
சுமார் 4 மாதங்கள் கடந்த பின்பும் இந்த பகுதியில் வெளியேறும் கழிவு நீரை அகற்ற எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் சேர்ந்த கழிவு நீரால் சிலர் சளி, தலைவலி, காய்ச்சல், வாந்தி-பேதி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 15-வது வார்டு பல்லவர் மேடு அருந்ததி பாளையம் என்ற பகுதியில் மழை நீர் தேங்கி வெளியேறாமல் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவமழை காலத்திலும் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் தேங்கும் மழை தண்ணீரை மாநகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.