தமிழ்நாடு செய்திகள்

மின்வாரியத்துக்கு கருவிகளை வாங்கியதில் முறைகேடு: 3-வது நாளாக வருமான வரி துறையினர் ஆய்வு

Published On 2023-09-22 11:55 IST   |   Update On 2023-09-22 11:55:00 IST
  • மீதம் உள்ள 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 3வது நாளாக சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
  • முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டு அம்பலமானால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு பரிந்துரைக்கவும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை:

தமிழக அரசின் மின் வாரியத்தின் கீழ் செயல்படும் மேட்டூர், தூத்துக்குடி, வடசென்னை அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்ட், கேபிள் உள்ளிட்ட கருவிகளை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதன் மூலம் வரிஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து மின்வாரியத்துக்கு தேவையான கருவிகளை சப்ளை செய்து வந்த 4 நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடங்கினர்.

இந்த சோதனை 40 இடங்களிலும் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் பெரும்பாலான இடங்களில் நேற்று மாலையில் சோதனை நிறைவு பெற்றது. மொத்தம் உள்ள 40 இடங்களில் 30 இடங்களில் சோதனை முடிவு பெற்றுள்ளதாக தெரிகிறது.

மீதம் உள்ள 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 3வது நாளாக சோதனையை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையின்போது மின்வாரியத்துக்கு கருவிகளை வாங்கியது தொடர்பாக பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இந்த ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்யும் பணியே தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறார்கள். மின் வாரியத்துக்கு வாங்கப்பட்ட கருவிகளின் விலை விவரங்களை சேகரித்துள்ள அதிகாரிகள், முறைபடியே அவைகள் வாங்கப்பட்டுள்ளனவா? என்பது பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

போலியான ரசீதுகளை போட்டு அதன் மூலமாக நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் அதன் உண்மைதன்மை பற்றியும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டு அம்பலமானால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு பரிந்துரைக்கவும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News