தமிழ்நாடு

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற காட்சி.

புத்தகத்துடன் திரிய வேண்டிய மாணவர்கள் கத்தியுடன் திரிவது வேதனை அளிக்கிறது- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வருத்தம்

Published On 2023-08-12 04:05 GMT   |   Update On 2023-08-12 04:05 GMT
  • வெளியூர்களில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் நாம் உள்ளூரில் நடக்கும் சம்பவங்களை பார்க்க மறந்துவிட்டோம்.
  • கர்நாடகத்தில் வேறு ஆட்சி நடக்கும் போது பல்வேறு போராட்டங்கள் நடத்தியவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்.

நெல்லை:

நெல்லை-அம்பை சாலையில் அமைந்துள்ள தருவை கிராமத்தில் பனங்காடு என்ற இடத்தில் பனை தேசிய திருவிழா-2023 என்ற நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அங்கிருந்து காரில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகைக்கு வந்த அவரை கலெக்டர் கார்த்திகேயன், துணை போலீஸ் கமிஷனர் அனிதா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கற்பகதரு என்று அழைக்கப்படும் பனைமரம் பாதுகாக்கப்பட வேண்டியது என்பது அனைவரது கொள்கையாகும். பனை வளர்ப்பை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். அறிவாற்றலுடன் வளர வேண்டிய மாணவர்கள் தற்போது பள்ளிகளில் அரிவாளுடன் சுற்றும் நிலை உள்ளது.

புத்தகத்தை எடுத்து க்கொண்டு திரிய வேண்டியவர்கள், கையில் கத்தியை வைத்துக்கொண்டு திரிவது மிகவும் வேதனை அளிக்கக்கூடியதாகவே இருக்கிறது. காவல்துறையும், நிர்வாகமும் ஏன் இந்த சம்பவத்தை கண்காணிக்க தவறினார்கள்.

வெளியூர்களில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் நாம் உள்ளூரில் நடக்கும் சம்பவங்களை பார்க்க மறந்துவிட்டோம். நாங்குநேரி விவகாரத்தில் தீர ஆராய்ந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுக்காக மட்டும் சாதியை பயன்படுத்துவதை தாண்டி சாதிய கொடுமைகள் இருக்கும் இடங்களை அலசி ஆராய்ந்து பொதுநலவாதிகள் முடிவெடுக்க வேண்டும்.

மற்ற ஊர்களையும், மற்ற மாநிலங்களையும் பற்றி ஆட்சியில இருப்பவர்கள் கவலைப்படுகிறார்கள். நமது மாநிலத்தை பற்றி ஆட்சியாளர்கள் மறந்துவிட்டார்கள். கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி இருந்தால் காவிரியை வழி நடத்துவோம் என சொன்னவர்கள், கர்நாடகத்தில் வேறு ஆட்சி நடக்கும் போது பல்வேறு போராட்டங்கள் நடத்தியவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் தயாசங்கர், பொதுச்செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News