தமிழ்நாடு செய்திகள்

249 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

Published On 2023-01-29 09:33 IST   |   Update On 2023-01-29 09:33:00 IST
  • முப்போக சாகுபடி முடிவுக்கு வந்ததால், 249 நாட்களுக்கு பிறகு தண்ணீர் திறப்பு நேற்று மாலையுடன் நிறுத்தப்பட்டது.
  • அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட் மின்சார உற்பத்தியும், சுரங்க மின்நிலையத்தில் 200 மெகாவாட் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால், 12 டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி முதல் ஜனவரி 28-ந் தேதி வரை, 230 நாட்களுக்கு அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால், குறித்த நாளான ஜூன் 12-ந் தேதிக்கு முன்பாக, மே 24-ந் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. முப்போக சாகுபடி முடிவுக்கு வந்ததால், 249 நாட்களுக்கு பிறகு தண்ணீர் திறப்பு நேற்று மாலையுடன் நிறுத்தப்பட்டது.

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட் மின்சார உற்பத்தியும், சுரங்க மின்நிலையத்தில் 200 மெகாவாட் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், செக்கானூர் மற்றும் நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, குதிரைக்கல்மேடு உள்ளிட்ட 7 கதவணை மின்நிலையங்களில் 210 மெகாவாட் என மொத்தம் 460 மெகா வாட் மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளது.

இந்த நீர்மின் நிலையங்கள், டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்போது, நீரின் விசையை கொண்டு மின் உற்பத்தி செய்வதற்காக அமைக்கப்பட்டவையாகும்.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் இன்னும் ஓரிரு நாட்களில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News