தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது

Published On 2022-08-13 12:25 GMT   |   Update On 2022-08-13 12:25 GMT
  • இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 6 குழுக்கள் பட்டம் விடும் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.
  • பட்டம் விடும் திருவிழா மதியம் 12 மணிக்கு துவங்கி மாலை 6.00 மணி வரை நடைபெறும்.

மாமல்லபுரம்:

தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலாத்துறை மூலம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த பட்டம் விடும் திருவிழா இன்று முதல் 15.08.2022 வரை மூன்று நாட்கள் நடைபெறும். இதில் 10 குழுக்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து 4 குழுக்களும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 6 குழுக்களும் இந்த பட்டம் விடும் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.


இந்த சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் பல்வேறு வடிவங்களில் எண்ணற்ற வண்ணங்களில் 100 க்கும் மேற்பட்ட பட்டங்கள் பறக்க விடப்பட்டுள்ளன. இந்த பட்டம் விடும் விழாவானது சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளது.

பட்டம் விடும் திருவிழா மதியம் 12 மணிக்கு துவங்கி மாலை 6.00 மணி வரை நடைபெறும். மேலும் பார்வையாளர்களுக்கென பிரத்யேகமாக மாலை 6.00 மணி முதல் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இன்று தாய் குடம் பிரிஜ்ட் பேண்ட் (Thaikkudam Bridge Band), 14.08.2022 மியூசிகல் பியூசன் (Musical Fusion) மற்றும் 15.08.2022 கிட்ஸ் டேலண்ட் ஷோ (Kids Talent Show) நடைபெறும்.

பட்டம் விடும் திருவிழாவிற்கு கலந்துகொள்ள வரும் சிறுவர்களுக்கு அனுமதி இலவசம். மேலும் திருவிழா நடைபெறும் இத்திடலில் 30க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் சந்தர மோகன், சுற்றுலா இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், மாமல்லபுரம், சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் வளர்மதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்,

Tags:    

Similar News