தமிழ்நாடு

தேர்தல் நடத்தை விதிமுறை அமல்: ஈரோடு ஜவுளி வாரச்சந்தை வியாபாரம் கடும் பாதிப்பு

Published On 2024-03-19 07:07 GMT   |   Update On 2024-03-19 07:07 GMT
  • பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
  • வெளி மாநில வியாபாரிகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை எடுத்து வந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

ஈரோடு:

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் பகுதிகளில் வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானது.

இந்த வாரச்சந்தைக்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

சாதாரண நாட்களில் நடைபெறும் வாரச்சந்தையில் ரூ.2 கோடி ரூபாய்க்கும், பண்டிகை காலங்களில் நடைபெறும் ரூ.5 கோடி ரூபாய் வரையிலும் வர்த்தகம் நடைபெறும். வெளி மாநில வியாபாரிகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை எடுத்து வந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 16-ந் தேதி முதல் அமலுக்கு வந்ததால் ரூ.50 ஆயிரம் மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்காக நிலை கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நேற்று இரவு கூடிய வார ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வெளி மாநில வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். இன்று வார ஜவுளி சந்தை நடைபெறும் நாளில் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதற்கு அஞ்சி வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. குறிப்பாக சிறு குறு வியாபாரிகள் ரொக்க பணத்திற்கு உரிய ஆவணங்கள் எடுத்து வருவதில் சிரமம் உள்ளதால், இரவு நடைபெற்ற ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது.

இதனால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில், சில்லரை வர்த்தகம் மட்டும் வழக்கம் போல் நடைபெற்றது. வழக்கமான விற்பனையில் 50 சதவீதம் மட்டுமே இருந்ததாக தெரிவித்த வியாபாரிகள். இனி தேர்தல் முடியும் வரை இதே நிலைமைதான் நீடிக்கும் என்றும், வியாபாரிகளுக்கு தேர்தல் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News