தமிழ்நாடு

எந்தவித சமரசமும் இன்றி, ஆரோக்கியமான உணவுகளை சமைப்பது எப்படி?- "நேச்சுரலே" நிறுவனம் சார்பில் கருத்தரங்கம்

Published On 2024-03-17 13:56 GMT   |   Update On 2024-03-17 14:02 GMT
  • கருத்தரங்கில் ஆரோக்கியமான உணவு சமையல் குறித்த கேள்வி, பதில் அமர்வும் இடம்பெற்றது.
  • இதில் பங்கேற்றவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஆரோக்கியமான மனம், உடல் மற்றும் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு நீடித்த மற்றும் ஆக்கப்பூர்வமான ஆன்லைன் வணிகத் தளத்தை 'நேச்சுரலே' நிறுவனம் நடத்தி வருகிறது.

இதேபோல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் நிலையான வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் இந்த நிறுவனம் தன்னை அர்ப்பணித்து அதுதொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.

அந்த வரிசையில் ஆரோக்கியமான மற்றும் சத்துகள் நிறைந்த சுவையான உணவுகளை சமைப்பது எப்படி? என்பது குறித்த கருத்தரங்கத்தை சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பேரோஸ் ஓட்டலின் 'அலெக்சாண்ட்ரியா டாவெர்ன்' உணவு விடுதியில் நேற்று நடத்தியது. 

இந்த கருத்தரங்கத்துக்கு நேச்சுரலே நிறுவனத்தின் நிறுவனர் சம்யுக்தா ஆதித்தன் தலைமை தாங்கினார். இதில் நடிகர் அரவிந்த்சாமியின் மகளும், புகழ்பெற்ற உணவு ஆலோசகரும், சமையல் கலை நிபுணருமான அதிரா முன்னிலை வகித்தார்.

சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் மிகவும் கவனம் செலுத்துவதோடு, சுவை மற்றும் நேரத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல், ஆரோக்கியமான உணவுகளை சமைப்பது குறித்த செயல்முறையை சுவாரஸ்யமாகவும், அழகாகவும் எடுத்துரைப்பதுதான் இந்த கருத்தரங்கின் நோக்கமாக இருந்தது.

அதன்படி, சமையல் கலை நிபுணர் அதிரா, ஆரோக்கியமான, சத்துகள் நிறைந்த சுவையான உணவுகள் தயாரிப்பு குறித்த சமையல் விளக்கத்தை கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு கூறியதோடு, சமைத்தும் காட்டினார். 

பின்னர், அலெக்சாண்ட்ரியா டாவெர்ன் உணவு விடுதி சமையல் கலைஞர்கள் மற்றும் உணவு ஆலோசகரும், சமையல் கலை நிபுணருமான அதிரா ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் கருத்தரங்கில் உள்ளவர்களுக்கு பகிரப்பட்டன. அதனை அவர்கள் அனைவரும் ருசி பார்த்து, உணவின் சுவைக்காக பாராட்டும் தெரிவித்தனர்.

மேலும், கருத்தரங்கில் ஆரோக்கியமான உணவு சமையல் குறித்த கேள்வி, பதில் அமர்வும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து கருத்தரங்கில் பங்கேற்ற ஆர்வலர்களுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சில நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன. அதுமட்டுமல்லாமல், இதில் பங்கேற்றவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News