தமிழ்நாடு

வெங்காயத்தை தொடர்ந்து சர்க்கரைக்கும் கட்டுப்பாடு விதிக்கலாம்- சரத் பவார்

Published On 2023-08-25 03:22 GMT   |   Update On 2023-08-25 03:22 GMT
  • விவசாயிகள் உற்பத்தி செய்யும் வெங்காயத்திற்கு போதுமான விலையை வழங்குவது அரசின் பொறுப்பு
  • விவசாயிகளின் செலவைக் கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்

விலையை கட்டுப்படுத்துவதற்காக வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை 40 சதவீதமாக உயர்த்திய மத்திய அரசு, இந்த வரிவிதிப்பு டிசம்பர் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற வேண்டும் என சரத் பவார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கடந்த நில தினங்களாக நாசிக் பகுதியில் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடைய உற்பத்தி வெங்காயத்திற்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், அரசு அதன்மீது 40 சதவீதம் வரி விதித்துள்ளது.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் வெங்காயத்திற்கு போதுமான விலையை வழங்குவது அரசின் பொறுப்பு. ஆனால், இதுகுறித்த உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

வெங்காயத்தை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,410-க்கு கொள்முதல் செய்வதாகவும், 2 லட்சம் டன் ஏற்றுமதிக்கு அனுமதிப்பதாகவும் அரசு அறிவித்தது. விவசாயிகளின் செலவைக் கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.

எப்படி இருந்தாலும் 40 சதவீத ஏற்றுமதி வரி திரும்பப்பெறுதல் வேண்டும். சர்க்கரை உற்பத்தியில் மகாராஷ்டிரா 2-வது மிகப்பெரிய மாநிலமாக உள்ளது. உலகிலளவில் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த வருடம் பிரேசிலில் ஏற்பட்ட வறட்சியால் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது.

இதனால் இந்தியாவில் உள்ள சர்க்கரை உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக சூழ்நிலை நிலவுகிறது. அவர்கள் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால், தற்போது சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க அரசு யோசனை செய்து வருகிறது. அப்படி நடந்தால், மாநில அரசு கரும்புக்கு நல்ல விலை கொடுக்க முடியாது.

இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.

Tags:    

Similar News