தமிழ்நாடு

ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை- சென்னையில் இருந்து 2வது நாளாக விமான சேவை ரத்து

Published On 2024-04-18 02:58 GMT   |   Update On 2024-04-18 02:58 GMT
  • விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
  • விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன.

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது.

கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துபாயில் சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.

விமான ஓடுபாதையில் வெள்ளம் புகுந்ததில், விமானங்கள் மற்றும் கார்கள், நீரில் பாதியளவு மூழ்கின. விமானங்கள் நிறுத்தும் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன.

கனமழை எதிரொலியால் சென்னையில் இருந்து துபாய் செல்லக்கூடிய 5 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதேபோல், மறு மார்க்கத்தில் இருந்து சென்னை வரும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் இன்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானம் ரத்து தொடர்பாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

துபாய் செல்ல வந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிறுவன கவுன்டரில் வாக்குவாதம் நடைபெற்றது. விமான நிறுவன அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags:    

Similar News