தமிழ்நாடு

மஞ்சூர், கூடலூரில் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த மழை- அவலாஞ்சியில் 6 செ.மீ பதிவு

Published On 2022-07-05 04:41 GMT   |   Update On 2022-07-05 04:41 GMT
  • மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கெத்தை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
  • கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

மஞ்சூர்:

நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கெத்தை உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து மழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசியது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அங்கு கடுமையான குளிரும் நிலவி வருகிறது.

இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

இதேபோல் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த மழைக்கு சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் உள்ள சர்க்கார் மூலா பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் முறிந்து விழுந்தது.

இதேபோல் கூடலூர்-ஊட்டி சாலையில் பைக்காரா என்ற இடத்திலும் மரம் முறிந்து விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருவதால் மரங்கள் விழும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

நீலகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டரில் வருமாறு:-

அவலாஞ்சி-61, அப்பர்பவானி-50, பந்தலூர்-42, சேரங்கோடு, 37, பாடந்தொரை-24, நடுவட்டம்-23, கூடலூர்-19, அப்பர், செருமுள்ளி-19 கூடலூர்-18.

Tags:    

Similar News