தமிழ்நாடு செய்திகள்

குன்னூர் உழவர் சந்தை சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதை காணலாம்.

குன்னூர், கோத்தகிரியில் விடிய விடிய கனமழை- 10 இடங்களில் மரங்கள் முறிந்தன

Published On 2022-12-14 11:41 IST   |   Update On 2022-12-14 11:41:00 IST
  • தொடர் மழைக்கு குன்னூர் உழவர் சந்தை சாலையில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது.
  • கனமழை காரணமாக கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குன்னூர்:

கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கடும் மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வண்டிசோலை, ஒட்டுப்பட்டரை, பர்லியார், ஜெகதளா, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் அதிகாலை வரை காற்றுடன் கனமழை கொட்டியது.

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, குன்னூர், கோத்தகிரியில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் வெள்ளத்தில் ஊர்ந்து சென்றன.

தொடர் மழைக்கு குன்னூர் உழவர் சந்தை சாலையில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிந்து அருகே இருந்த 3 வீடுகளுக்குள்ளும் மண் விழுந்தது. அத்துடன் மழைநீரும் அந்த வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தது. தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் உழவர் சந்தை சாலையில் மண் மற்றும் குப்பைகள் சேர்ந்து அந்த பகுதியே சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வேறு வழியில் திருப்பி விடப்பட்டது.

இந்த மழைக்கு குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அதனை உடனடியாக தீயணைப்பு துறையினர் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

கனமழை காரணமாக கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கனமழை காரணமாக குன்னூர் கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய துறை சார்ந்த அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோல் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொடநாடு, சோலூர்மட்டம், கீழ்கோத்தகிரி உள்ளிட்ட பகுதியிலும் கனமழை பெய்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 30 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழைக்கு தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள புத்தூர் காலனி குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.

Tags:    

Similar News