தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை- பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
- கடந்த சில நாட்களாகவே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
- தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையம் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. அதில் பயணிகள் சிரமப்பட்டு சென்றனர்.
தூத்துக்குடி:
தமிழகத்தில் வருகிற 29-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எனினும் கடந்த சில நாட்களாகவே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நள்ளிரவு கனமழையாக பெய்தது. அதிகபட்சமாக கடம்பூரில் 53 மில்லிமீட்டரும், தூத்துக்குடி யில் 31 மில்லிமீட்டரும், கழுகு மலையில் 24 மில்லிமீட்டரும் காயல்பட்டினம், கயத்தாறில் 15 மில்லிமீட்டரும் மழை பதிவானது.
இதேபோல் குலசேகரன்பட்டினம், கீழ அரசரடி, கோவில்பட்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் ஆங்காங்கே தேங்கி கிடந்த தண்ணீரை மாநகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் உறிஞ்சி அகற்றினர்.
தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையம் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. அதில் பயணிகள் சிரமப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே இன்று காலையும் லேசான மழை பெய்தது. இதைத்தொடர்ந்து மாணவர்களின் நலன்கருதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.