தமிழ்நாடு செய்திகள்
மழை காரணமாக ஈரோடு பவானி ரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் தரைப்பாலத்தை தொட்டபடி தண்ணீர் செல்வதை படத்தில் காணலாம்.

வரலாறு காணாத மழை- ஈரோட்டில் 2 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது

Published On 2022-08-27 10:07 IST   |   Update On 2022-08-27 10:07:00 IST
  • மழை காரணமாக ஈரோடு ரெயில்வே நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது.
  • மழை காரணமாக ஈரோடு பவானி ரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் தரைப்பாலத்தை தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

இந்நிலையில் நேற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் மாலை 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது.

இந்த மழை காரணமாக ஈரோடு ரெயில்வே நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் ஈரோட்டில் இருந்து வெளியூர் செல்ல வந்த பயணிகளும், வெளியூரில் இருந்து ஈரோட்டுக்கு வந்த பயணிகளும் கடும் அவதி அடைந்தனர்.

பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. பல்வேறு இடங்களில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றது. இதனால் மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த மழை காரணமாக சூளை பாரதி நகரில் 50 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இரவில் சென்று விட்டனர். இன்று காலை தண்ணீர் வடிந்ததும் மீண்டும் அவர்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

மழை காரணமாக ஈரோடு பவானி ரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் தரைப்பாலத்தை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இந்த கனமழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் சேறும் சகதியுகமாக காட்சியளித்தது.

வழக்கம்போல் வ.உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர் ஈரோட்டில் 2 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் மாநகரப் பகுதி மழை நீரால் தத்தளித்தது.

இதேப்போல் பவானி, பவானிசாகர், மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, வரட்டுப்பள்ளம், குண்டேரி பள்ளம், பெருந்துறை, நம்பியூர், சென்னிமலை, கொடிவேரி பகுதிகளிலும் கனமழை பெய்தது. மேலும் மழையால் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சில இடங்களில் நேற்று இரவு ஏற்பட்ட மின்தடை இன்று காலை வரை சரியாகவில்லை. இதனால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பவானி-64, பவானிசாகர்-34.20, மொடக்குறிச்சி-31, கவுந்தப்பாடி-26.4, வரட்டுபள்ளம்-20.4, குண்டேரி பள்ளம்-14, பெருந்துறை-13, தாளவாடி-11.20, அம்மாபேட்டை-11, கொடுமுடி-8, நம்பியூர், சென்னிமலை, கொடிவேரி-7.

மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 396 மி.மீ மழை கொட்டியது.

Tags:    

Similar News