தமிழ்நாடு

பக்கிங்காம் கால்வாய் முகத்துவார பகுதியில் பிடிபடும் நண்டுகளுக்கு கிராக்கி: கிலோ ரூ.1000-வரை விற்பனை

Published On 2022-09-30 06:48 GMT   |   Update On 2022-09-30 06:48 GMT
  • மீனவர்கள் வலையில் சிக்கும் ஆற்று நண்டுகள் உயிருடன் ஒரு கிலோ ரூ.1000 வரை கொடுத்து சென்னை ஏற்றுமதி வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.
  • மீனவர்கள் தங்களது வலையில் நண்டுகள் சிக்கியதும் அவற்றை காயமின்றி லாவகமாக பிடித்து அதன் கொடுக்கை கயிற்றை கொண்டு கட்டிவிடுகின்றனர்.

மாமல்லபுரம்:

பக்கிங்காம் கால்வாயில் இணையும் கடற்கரை முகத்துவார பகுதிகளில் உயிர் வாழும் ஆற்று நண்டுகள் கடலின் சீற்றம், கடல் உள்வாங்குதல் மற்றும் காலநிலை மாற்றத்தின்போது கால்வாயில் இருந்து கடலுக்குள் சென்றுவிடும். பின்னர் இந்த வகை நண்டுகள் 3 முதல் 5 மாதங்களில் ஒரு கிலோ எடைக்கு மேல் வளர்கிறது.

இந்த வகை நண்டுகளுக்கு சிங்கப்பூர், மலேசியா, அரேபியா, போலந்து போன்ற வெளிநாடுகளில் அதிக விலை கிடைக்கிறது. இதனால் மீனவர்கள் வலையில் சிக்கும் இந்த ஆற்று நண்டுகள் உயிருடன் ஒரு கிலோ ரூ.1000 வரை கொடுத்து சென்னை ஏற்றுமதி வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். இதனால் இந்த ஆற்று நண்டுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.

மீனவர்கள் தங்களது வலையில் நண்டுகள் சிக்கியதும் அவற்றை காயமின்றி லாவகமாக பிடித்து அதன் கொடுக்கை கயிற்றை கொண்டு கட்டிவிடுகின்றனர். இதனால் இவ்வகை நண்டுகள் 48 மணி நேரம் வரை உயிருடன் இருப்பதாகவும், பின்னர் அதை பாதுகாப்பாக விமானத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

மாமல்லபுரம், கொக்கிலமேடு, தேவநேரி, கோவளம் பகுதியில் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களின் வலையில் இந்தவகை ஆற்று நண்டுகள் தற்போது பெருமளவில் பிடிபடுவதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News