தமிழ்நாடு

தீ விபத்தில் வீட்டிற்குள் சிக்கிய மூதாட்டியை உயிருடன் மீட்ட அரசு பஸ் டிரைவர்- கதவை உடைத்து காப்பாற்றினார்

Published On 2023-03-08 06:52 GMT   |   Update On 2023-03-08 06:52 GMT
  • கதவை உள் தாழிட்டு சமையல் செய்வதற்காக சரஸ்வதி விறகு அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக தீப்பொறி வீட்டின் குடிசை பகுதியில் பற்றி கொண்டது.
  • அரசு பஸ் டிரைவர் மனோகரனை பொதுமக்கள் பாராட்டினர்.

கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கொளநால்லி அடுத்துள்ள கருங்கரடு பகுதியை சேர்ந்தவர் சம்பூர்ணம் (59). தனது தாயார் சரஸ்வதி (82) என்பவருடன் குடிசை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை சம்பூர்ணம் விவசாயக் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். அவரது தாய் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

கதவை உள் தாழிட்டு சமையல் செய்வதற்காக சரஸ்வதி விறகு அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக தீப்பொறி வீட்டின் குடிசை பகுதியில் பற்றி கொண்டது.

பின்னர் சிறிது நேரத்தில் தீ மலமலவென்ன குடிசையில் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் வீட்டுக்குள் புகை மண்டலமாக காட்சியளித்தது. சரஸ்வதியால் உடனடியாக வெளியேற முடியவில்லை.

அப்போது ஈரோட்டில் இருந்து கொடுமுடி நோக்கி 43-ம் நம்பர் அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை மனோகரன் என்பவர் ஓட்டி வந்தார். பின்னர் மூதாட்டி வீட்டில் தீ எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனோகரன் உடனடியாக பஸ்சை நிறுத்தி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சரஸ்வதியை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார். இதனால் மூதாட்டி சரஸ்வதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது குறித்து மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

எனினும் இந்த தீ விபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் எரிந்து சேதமானது.

உரிய நேரத்தில் சமயோதிகமாக செயல்பட்டு மூதாட்டியை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர் மனோகரனை பொதுமக்கள் பாராட்டினர்.

இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News