பழுதான பஸ்சை மாணவிகளை தள்ள வைத்த விவகாரம்: பஸ் டிரைவர்-கண்டக்டர் உள்பட 4 பேர் சஸ்பெண்டு
- கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து மணக்குடிக்கு அரசு பஸ் வந்து சென்றது.
- சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் ஏராளமான பஸ்கள் முறையாக பராமரிக்கப்படாததால் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த பஸ்கள் அடிக்கடி சாலையில் நடுரோட்டில் பழுதாகி நிற்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து மணக்குடிக்கு அரசு பஸ் வந்து சென்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் இருந்தனர். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுரோட்டில் பழுதாகி நின்றது. இதையடுத்து பஸ்சில் இருந்த கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்சை விட்டு இறங்கி பஸ்சை தள்ளினார்கள்.
அப்போது இதை ஒருவர் வீடியோவில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மாணவிகள் பஸ்சை தள்ளிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பல கருத்துக்களை பதிவிட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பஸ்சில் இருந்து பயணிகளை இறக்கி விட்டு பஸ்சை தள்ள வைத்தது தவறு என்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட பஸ்சை இயக்கிய டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்டு செய்து நாகர்கோவில் போக்குவரத்து கழக பொதுமேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் நடுரோட்டில் பழுதாகி நின்ற பஸ்சை பராமரித்த ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து 2 ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பழுதான அரசு பஸ்சை கல்லூரி மாணவர்கள் தள்ளிய விவகாரத்தில் டிரைவர்-கண்டக்டர் உள்பட 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பது குமரி மாவட்ட போக்குவரத்து ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.