தமிழ்நாடு

கோத்தகிரி அருகே விநாயகர் சிலை கண் திறந்ததாக பரபரப்பு

Published On 2022-06-24 04:45 GMT   |   Update On 2022-06-24 04:45 GMT
  • காலை கோவில் திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
  • விநாயகர் சிலை கண் திறந்த தகவல் அந்த கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் வேகமாக பரவியது.

அரவேணு:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கட்டபெட்டு-குன்னூர் செல்லும் சாலையில் பெட்டட்டி எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த பகுதியில் ஒரு விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினமும், காலை, மாலை வேளைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இதில் பெட்டட்டி, பெட்டட்டி சுங்கம், இளித்தொரை, அண்ணா நகர், காந்திநகர், அணியாரா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

நேற்று வழக்கம்போல் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை கோவில் திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் விநாயகர் சிலையின் ஒரு பகுதி கண் திறந்து மூடியதாக கூறப்படுகிறது.

ஒரு சில நொடிகள் இது போன்று விநாயகர் சிலை கண் திறந்து மூடியதாக அங்கிருந்த பக்தர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே விநாயகர் சிலை கண் திறந்த தகவல் அந்த கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் வேகமாக பரவியது.

இதையடுத்து அப்பகுதி மக்களும் விநாயகர் சிலை கண் திறந்த காட்சியை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

விநாயகர் சிலை கண் திறந்ததாக கூறப்பட்ட தகவலால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News